சென்னை:அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும், புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பொதுக்குழுவை நடத்தவும், புதிய தீர்மானங்களை நிறைவேற்றவும் அனுமதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சண்முகம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் நேற்று (ஜூன் 22) இரவு மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 2017ம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டனர். பொதுக்குழுவில் தெரிவிப்பதாக கூறப்பட்ட அஜெண்டாவை விட, கூடுதல் அஜெண்டா கூடாது என்பதுதான் தனி நீதிபதி முன்பு வாதம் செய்யப்பட்டது.
இன்று (ஜூன் 23) நடக்க உள்ள பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இதுதவிர கூடுதல் தீர்மானங்கள் வரக் கூடும் என்ற சந்தேகமும், 'ஒற்றை தலைமை' கொண்டு வரப்படலாம் என்ற அச்சமும் உள்ளது. இரட்டை தலைமை என்பது கட்சியின் அடிப்படை கட்டமைப்பு, உள்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என கூறி தங்கள் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடலாம். கட்சி விதி மீறப்பட்டால் நீதிமன்றம் தலையிடலாம். 2017ம் ஆண்டிலிருந்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரே கட்சியின் அடிப்படை உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர். 2021ல் கொண்டு வரப்பட்ட திருத்தப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டும் முடிவுகள் எடுக்க முடியும். பொதுக்குழுவில் என்ன நடக்க போகிறது என்பது வருபவர்களுக்கு தெரிய வேண்டும். அதற்கான சிந்தனையோடு அவர்கள் வருவார்கள்.
பொதுக்குழு நடத்தலாம். தீர்மானங்கள் மாற்றப்படக்கூடாது என தெரிவித்தோம். ஆனால், அதை தனி நீதிபதி கருத்தில் கொள்ளவில்லை. பாதுகாப்பான இடைக்கால உத்தரவு இல்லாமல், பொதுக்குழு நடந்தால், வழக்கே செல்லாததாகிவிடும். பொதுக்குழு நடைபெறலாம். ஆனால், கட்சி விதிகளை பின்பற்ற வேண்டும். கூடுதல் தீர்மானங்கள் சேர்க்க அனுமதிக்க கூடாது. அடுத்து 15 நாள் நோட்டீஸ் கொடுத்து பின் பொதுக்குழுவை கூட்டலாம்.
சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு நடைபெற வேண்டும். ஒற்றைத் தலைமைக்கு ஒப்புதல் அளித்தவர்களுக்கு மட்டுமே அனுமதிச் சீட்டு வழங்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தெரியாமல் எந்த தீர்மானத்தையும் சேர்க்க முடியாது என வாதம் செய்தார்.
ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வாதம்:ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விதிகளை வகுக்க, திருத்த, நீக்க பொதுக்குழுவுக்கு முழு அதிகாரம் உள்ளது. மற்ற அமைப்புகளை விட அரசியல் கட்சிகள் வேறுபட்டவை. 23 தீர்மானத்துக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும், இதைத் தவிர வேறு எந்த தீர்மானமும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் சேர்க்க கூடாது.
பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை கட்சி தொண்டர்கள் தேர்வு செய்வர் என்ற விதியை மாற்ற முடியாது. கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகத்துக்கும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரே பொறுப்பாவர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்படும் என எந்த வாதமும் நீதிமன்றத்தில் முன் வைக்கப்படவில்லை. கட்சி விதிகளுக்கு உட்பட்டு இதுவரை செயல்பட்டுள்ளேன்.
23 தீர்மானங்கள் இருவராலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் புதிய கோரிக்கை வைக்கப்பட்டாலும் அதை தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைபாளர் ஒப்புதல் இல்லாமல் எந்த வித புதிய தீர்மானமும் கொண்டு வர முடியாது. கட்சி விதிகளை தளர்த்தவும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அதிகாரம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதம்:ஓ.பன்னீர்செல்வம் பாதிப்படைவார் என்ற நோக்கில் பொதுக்குழு உறுப்பினர் வழக்கு தொடந்துள்ளார். அவ்வாறு தொடர முடியாது. விதிகளை திருத்தி தீர்மானம் நிறைவேற்றுவதாக இருந்தாலும், அதனால் பொதுக்குழு உறுப்பினரான மனுதாரருக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படப் போகிறது என நிரூபிக்கவில்லை. விதிகளை திருத்த பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒப்புதல் தெரிவித்தால் அடிப்படை கட்டமைப்பு குறித்த கேள்வி எழாது. பொதுக்குழுவின் முடிவே இறுதியானது. அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.