ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை மாநில மொழிகளில் வெளியிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் செப்டம்பர் 9ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளன. இச்சூழலில்,பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தர்ராஜன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், ”அனைத்து மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிட வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை மத்திய அரசு, அதை அனைத்து மொழிகளிலும் வெளியிடவில்லை” என புகார் தெரிவித்துள்ளார்.
மேலும், ”வரைவு அறிக்கை பிரிவுகளை ஆழமாக ஆய்வு செய்யவேண்டியுள்ளது. அதைத் தமிழில் வெளியிட்டால் தான், தமிழ் மக்களால் கருத்துத் தெரிவிக்க முடியும், எனவே தமிழில் வெளியிட்டு, அதன் மீது கருத்துக்களைத் தெரிவிக்க 60 நாட்கள் அவகாசம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு, இரண்டு வாரங்களில் இம்மனுவுக்கு பதிலளிக்கமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.