கரோனாவை தடுக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்தியாவில் புனேவில் உள்ள சீரம் நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடனும், லண்டனைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்துடனும் சேர்ந்து கோவிஷீல்ட் என்ற தடுப்பு மருந்தை உற்பத்தி செய்துள்ளது.
இந்த மருந்து சோதனை நடவடிக்கையில் கலந்துகொண்ட தனக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதால், கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை பாதுகாப்பானதல்ல என அறிவிக்கக் கோரி, மருந்து பரிசோதனையில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த ஆசிப் ரியாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
ஆசிப் மனுவில், “கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி தடுப்பு மருந்தை போட்டுக் கொண்டு சோதனைக்கு ஆளான போது, 10 நாட்களுக்கு பின் தலைவலி, தொடர் தூக்கம் போன்ற பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டு, 16 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். அதனால், எனக்கு ஐந்து கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்டு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், மார்ச் 26ஆம் தேதிக்குள் இது தொடர்பாக பதிலளிக்கும்படி, மத்திய சுகாதாரத் துறை, மருந்து கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க...திஷா ரவியின் தனியுரிமையைப் பாதுகாப்பது அவசியம் - டெல்லி உயர் நீதிமன்றம்