சென்னை:திருவாரூர் மாவட்டம்,தண்டலை கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் அருண்குமார், மருத்துவ மேற்படிப்பில் கிராமப்புறங்களில் பணியாற்றியவர்களுக்கான 5 விழுக்காடு ஊக்க மதிப்பெண்கள் வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்தார்.
நீதிமன்றத்தில் மனு தாக்கல்
அவரது கோரிக்கையை மருத்துவ கல்வி இயக்குநரக தேர்வுக்குழு நிராகரித்தது. இதை எதிர்த்து அருண்குமார் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 'மாவட்ட தலைநகரிலிருந்து 10 கிமீ சுற்றளவுக்குள் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றியதால், ஊக்க மதிப்பெண் சலுகையை வழங்க முடியாது' எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
மேல் முறையீட்டு மனு
இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவர் அருண்குமார் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'கிராம பஞ்சாயத்தில் அமைந்துள்ளதால், கிராமப்புறங்களில் பணியாற்றியோருக்கான ஊக்க மதிப்பெண்ணை வழங்க உத்தரவிட வேண்டும்' என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.