சென்னை: ஐஐடி வளாகத்தில் உள்ள நாய்களை முறையாகப் பராமரிக்கக் கோரி கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த மனுவில், கடந்த 6 மாதங்களில் ஐஐடியில் 49 நாய்கள் இறந்ததாகவும், கூட்டுக்குழு ஆய்வறிக்கையில் 14 நோய்வாய்ப்பட்ட நாய்கள் இருப்பதாகவும், அவற்றைக் கால்நடை மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஐஐடி தரப்பு வாதம்
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி தரப்பு ஐஐடி வளாகத்திலிருந்து 22 நாய்களை மீட்டு, மருத்துவ பரிசோதனைகள் எடுக்கப்பட்ட பிறகு, தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைத்ததாகவும், அவற்றைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் வரவேற்பு தெரிவித்துள்ளது ஐஐடி தரப்பில் தங்களிடம் உள்ள நாய்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதாகவும், பிற விலங்குகளைத் தாக்குவதால் தான் அடைத்து வைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இது பற்றி விரிவான அறிக்கைத் தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.
நீதிமன்றம் கருத்து
பின்னர் நீதிபதிகள், செல்லப் பிராணிகள் மற்றும் தெரு நாய்கள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பாக விதிகள் வகுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தது. மேலும், இந்த விவகாரத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ வேண்டுமென விருப்பம் தெரிவித்தனர்.
இது பற்றி மேலும் கருத்து தெரிவித்த நீதிபதிகள், பிற நாடுகளில் பிராணிகள் வளர்ப்பு எப்படி முறைப்படுத்தப்படுவது குறித்து ஆய்வு செய்து, அதுகுறித்த விதிகளை வகுப்பதற்கான ஆலோசனைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி மனுதாரர் அமைப்பிற்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையைப் வருகிற பிப்.9ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: சட்டக்கல்லூரி மாணவர் தக்கப்பட்ட விவகாரம் : அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு