சென்னை:தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டினர். இதற்கு, உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, விளக்கம் அளித்தது போல, சமூக வலைதளத்தில் கடிதம் ஒன்று பரவியது.
இந்த கடிதம் போலியானது என்றும், இதனை பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் நிர்மல்குமார் வெளியிட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி, நிர்மல்குமார் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில், நிர்மல் குமார் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், "இந்த பதிவை நான் உருவாக்கவில்லை. எனக்கு வந்ததை சமூக வலைதளத்தில் பகிர்ந்தேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று (ஏப். 11) விசாரணைக்கு வந்தது. அப்போது நிர்மல்குமார் தரப்பிலிருந்து, நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 8ஆம் தேதி காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சர்ச்சைக்குரிய பதிவை நீக்க வேண்டும். தேவைப்படும் போது காவல்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும். 25 ஆயிரம் ரூபாய்க்கான இரு நபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:சந்தேகத்திற்கு இடமாக இளம்பெண் இறப்பு குறித்த வழக்கு - பதில் மனு தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவு