தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 2 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

By

Published : Jul 2, 2021, 10:56 PM IST

முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

பாலியல் வழக்கில் பிணை வழங்கக் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்துள்ள மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே மணிகண்டனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையம் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை சைதாப்பேட்டை நடுவர் நீதிமன்றம் நிராகரித்தது. அதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதி நிர்மல்குமார் முன் முறையிடப்பட்டது.

அப்போது மகளிர் காவல்துறை தரப்பில், மணிகண்டன் நடிகையுடன் பேசுவதற்காக தனி செல்போன் பயன்படுத்தியதாகவும், அந்த செல்போன் மதுரையில் உள்ள அவரது வீட்டிலிருப்பது தெரியவந்துள்ளதாகவும் கூறினர்.

அதன்காரணமாக, அவரை மதுரை அழைத்து சென்று விசாரிக்க அனுமதி வழங்குமாறு தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மணிகண்டன் தரப்பில், ஏற்கனவே 24 மணி நேரமும் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அவசியம் இல்லை. இந்த வழக்கு ஆட்சி மாற்றத்திற்கு பின் அரசியல் நோக்கத்துடன் நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகையுடன் மணிகண்டன் பேச பயன்படுத்திய செல்போன் மதுரையில் உள்ளதால், அவரை காவலில் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே நாளை (ஜூலை.3), நாளை மறுநாள் (ஜூலை.4) ஆகிய இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த விசாரணை சட்டத்திற்குட்பட்டு நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details