நடிகர் விஷாலின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான, விஷால் ஃபிலிம் ஃபேக்டரியில் பெண் கணக்காளர் ரம்யா என்பவர் பணியாற்றி வருகிறார்.
பெண் கணக்காளர் மோசடி
சில தினங்களுக்கு முன் அவரது உறவினர்களுடன் சேர்ந்து, ஊழியர்களின் ஊதியத்துக்கான வருமான வரித்தொகை ரூ. 45 லட்சம் பணத்தை வரித்துறைக்கு செலுத்திவிட்டதாக, போலி ஆவணங்களைக் காட்டி விட்டு, மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக, அந்நிறுவனத்தின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
முன் ஜாமீன்
இதுதொடர்பான மோசடி வழக்கில் தன்னை கைது செய்யக்கூடும் எனக் கணக்காளர் ரம்யா, முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் ரம்யா தரப்பில், உயர் நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி மோசடி செய்ததாகக் கூறப்படும் 45 லட்சம் ரூபாயில் 21 லட்சம் ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்திவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
நிபந்தனையுடன் முன்ஜாமீன்
நடிகர் விஷால் தரப்பில் ரம்யாவிற்கு முன்ஜாமீன் வழங்க எந்த எதிர்ப்பும் தெரிவிக்காததால், ரம்யாவிற்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ரூ.15 லட்சம் பிணைத் தொகையாக செலுத்தவும், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்குக் கையெழுத்திட வேண்டும் எனவும் நிபந்தனை விதித்து, முன்ஜாமீன் வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை வெளியிட்டால் போராடுவோம் - கரூர் பாமக மாவட்ட செயலாளர்