தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசு அலுவலகங்களில் அம்பேத்கர் புகைப்படம் - உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தள்ளுபடி! - Ambedkar Portrait Issue

தமிழ்நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள், காவல் நிலையங்களில் அம்பேத்கர் புகைப்படம் வைக்க உத்தரவிடக்கோரிய வழக்கு திரும்பப்பெறப்பட்டதை அடுத்து, அவ்வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரசு அலுவலகங்களில் அம்பேத்கர் புகைப்படம்
அரசு அலுவலகங்களில் அம்பேத்கர் புகைப்படம்

By

Published : Jul 25, 2022, 1:34 PM IST

சென்னை: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச்சேர்ந்த அய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'இந்திய அரசியல் சட்டத்தை வகுத்த அம்பேத்கர் புகைப்படத்தை அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் வைக்க வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோன்று, டெல்லியில் அரசு அலுவலகங்களில் 'அம்பேத்கர்' படத்தைப்பொருத்த வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர், காந்தி, நேரு, அம்பேத்கர், திருவள்ளுவர், பெரியார், முன்னாள் முதலமைச்சர்கள் காமராஜர், அண்ணா உள்ளிட்டோரின் புகைப்படங்கள் வைக்க அனுமதியுள்ளது.

ஆனால், இதில் அம்பேத்கர் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம், அதன் மதுரைக்கிளை மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள நீதிமன்றங்கள், காவல் நிலையங்களில் அம்பேத்கரின் புகைப்படத்தை வைக்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, அம்பேத்கர் படம் வைப்பது தொடர்பாக ஏற்கெனவே நீதிமன்ற உத்தரவு உள்ளதால் மீண்டும் அதே கோரிக்கையுடன் வழக்குத்தொடர்ந்துள்ளதால் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்போவதாக மனுதாரருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:அம்பேத்கர் போட்டோ வைத்த வங்கி ஊழியர் பணிநீக்க விவகாரம் - சம்பளப் பாக்கி இல்லாமல் செட்டில் செய்ய உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details