சென்னை:ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் 1,678 கோடி ரூபாய் வரை முதலீடு செய்தவர்களுக்கு மாதந்தோறும் 10 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறிய நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் வட்டியை தராமல் மோசடியில் ஈடுபட்டதாக, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தானாக முன்வந்து ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி நிர்வாக இயக்குநர்கள் ராஜசேகர், ஜெய்கமல், ஜெயக்கொடி, நவீன், மாலதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், வங்கி கணக்குகள் முடக்கத்தால்தான் பணத்தை திருப்பித்தர இயவில்லை என்றும், திருப்பித் தர தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து 5 பேரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்த நீதிபதி இளந்திரையன், டெப்பாசிட் செய்தவர்களின் பணத்தை திருப்பி அளித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட வருவாய் அலுவலருக்கு உத்தரவிட்டு இருந்தார். மேலும், அனைத்து ஆரூத்ரா நிறுவனத்தின் இயக்குநர்கள், கிளை பொறுப்பாளர்கள், முகவர்கள் ஆகியோர் பொருளாதார குற்றப்பிரிவு போலிசார் தினம்தோறும் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி முதலீட்டாளர்களின் தகவல்களோடு ஆஜராக வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.
மேலும், டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்கும் வகையில் பொருளாதார குற்றப்பிரிவு போலிசாரிடம் மனுதாரர்கள் அனைவரும் இணைந்து 50 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.