சென்னை: தேவனாம்பட்டினம் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அறிவழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவில், "கடந்த மார்ச் 2000ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சுருக்குமடி வலைகளை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கிடையில் மீன் பிடி தடை காலத்தை மறு ஆய்வு செய்யவும், மீன் வளத்தை மேம்படுத்தவும், ஒன்றிய அரசு ஒரு தொழில் நுட்ப குழுவை அமைத்தது.
2014ஆம் ஆண்டு இந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த மீனவர்களுக்கு உரிமை உள்ளது என 2020ஆம் ஆண்டும், மார்ச் 23ஆம் தேதி ஒன்றிய அரசு உத்தரவிட்டது.
ஆனால், தமிழ்நாட்டில் இந்த உத்தரவை பின்பற்றாததால், சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என 2021ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி மாநில அரசிற்கு சங்கம் சார்பில் மனு அளித்தோம். அந்த மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மீன்வளத்துறை உதவி இயக்குநர் அனுப்பிய பதில் கடிதத்தில், சுருக்குமடி வலையை கொண்டு மீன்பிடி தொழில் செய்வது தொடர்பாக அரசு உரிய முடிவு எடுக்கும் என தெரிவித்தார்.
இதனைப்பதிவுசெய்து கொண்ட நீதிபதி, மனுதாரர்களின் கோரிக்கை மனுவை நான்கு வாரங்களில் பரிசீலித்து தகுந்த முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.