தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

MHC Condemns: தவறான நோக்கத்தில் பயன்படுத்தப்படும் பக்தர்களின் காணிக்கை - நீதிமன்றம் கண்டனம்

சென்னை: கோயில், பக்தர்களின் நலனுக்காக தானமாகக் கொடுக்கப்பட்ட சொத்துகளை, அந்த நோக்கத்துக்காக பயன்படுத்தாமல் இருப்பது பாவச்செயல் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றம்
நீதிமன்றம்

By

Published : Nov 26, 2021, 8:06 PM IST

கோவை, ரங்கே கவுடர் தெருவில் உள்ள அருள்மிகு மாகாளியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை 1960ஆம் ஆண்டு முதல் குத்தகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வரும் ஸ்ரீதரன்,

அந்தச் சொத்துக்கான வாடகையை 17,200 ரூபாயாக உயர்த்தி 2016ஆம் ஆண்டு கோயில் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை நிராகரிக்கக்கோரி வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, இதுவரை அவர் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 400 ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளதாகவும், அதை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தள்ளுபடி செய்த நீதிபதி

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், 1960ஆம் ஆண்டு வழங்கப்பட்ட குத்தகை ஐந்து ஆண்டுகளில் முடிந்துவிட்ட நிலையில், தற்போது மனுதாரர் ஆக்கிரமிப்பாளர் தான் என்பதால், அவரது கோரிக்கையை ஏற்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், மூன்று மாதங்களில் மனுதாரர் கோயில் நிலத்தில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

ஊழலில் கூட்டு

தொடர்ந்து, இந்த வழக்கு மட்டுமல்லாமல் அறநிலையத் துறை தொடர்புடைய பல்வேறு வழக்குகளிலும் கோயில் சொத்துக்களின் வாடகை முறையாக வசூலிக்கப்படுவதில்லை என்றும், அலுவலர்களும் அறங்காவலர்களும் கைகோர்த்து செயல்பட்டு, சட்டவிரோத ஊழல் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அதிருப்தி தெரிவித்தார்.

தொடர்ந்து, கோயில், பக்தர்களின் நலனுக்காக செலவிடப்பட வேண்டுமென்ற பெரிய எதிர்பார்ப்புகளுடன் பல உன்னத ஆத்மாக்கள், தங்கள் வருமானத்தை மத வழிபாட்டுத் தலங்களுக்குத் தானமாக எழுதி வைத்துள்ளதாகவும், அவர்களின் விருப்பத்தை கவுரவப்படுத்தாமல் அலுவலர்கள் செயல்படுவது பாவச்செயல் என்றும், அந்த வழிபாட்டுத் தலங்களில் உள்ள தெய்வங்களின் உரிமைகள் மீறப்படுவதாகவும் வேதனைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:எம்ஜிஆருக்கு சிறுநீரகம் தானம் செய்த லீலாவதி மரணம் - அதிமுகவினர் அஞ்சலி

ABOUT THE AUTHOR

...view details