சென்னை:அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தலுக்கு தடை விதிக்க கோரி அதிமுக உறுப்பினர் ஜெயச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "இந்த தேர்தலில் போட்டியிட அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்னும் ஒரே நோக்கத்தில் தேர்தல் நடைபெற்றது. இதனை தேர்தல் ஆணையத்துக்கு புகாராக தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, பதவி நியமன ஒப்புதல் அளிக்க, தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
போட்டியின்றி தேர்வு
இதனிடையே அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வானதாக நேற்று அறிவிக்கப்பட்டனர். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், உள்கட்சி தேர்தலில், தேர்தல் ஆணையத்துக்கு என்ன பங்கு உள்ளது என்றும், எந்த பங்கும் இல்லாமல் தேர்தல் ஆணையத்தை இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்த்ததால், வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்று ஆராய வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதற்கு மனுதாரரில் தரப்பில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி பதிவு செய்யப்பட்ட கட்சியில் நடந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய அனைவருக்கும் அனுமதி வழங்கவில்லை. ஜனநாயகம் மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாக்குரிமை என்பது அரசியல் சட்ட உரிமை. எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்ததுதான் என்று தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க:சட்ட விதிகளின்படி அதிமுக அமைப்பு தேர்தல் - ஓ.பன்னீர்செல்வம்