சென்னை: கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை உதவியாளர் முதல் உதவிப் பதிவாளர் போன்ற பணியிடங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக, மாநில அளவிலான கூட்டுறவுப் பயிற்சி நிலையத்தை சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டத்திலுள்ள செம்மடுவு கிராமத்தில் 4.33 ஏக்கரில் 61.80 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்க அதிமுக ஆட்சியில் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கூட்டுறவுத் துறை அரசாணை பிறப்பித்து கட்டுமான பணிகளும் தொடங்கப்பட்டன.
கட்டுமான பணிகள் நிறுத்தம்
பின், திமுக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு, ஏற்காட்டிற்குப் பதிலாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்திலுள்ள மன்னவனூர் கிராமத்தில் தேசிய அளவிலான கூட்டுறவு மேலாண்மை படிப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தை அமைப்பது என ஆகஸ்ட் மாதம் முடிவெடுக்கப்பட்டு, ஏற்கனவே நடைபெற்றுவந்த ஏற்காடு பயிற்சி நிலைய கட்டுமான பணிகளை நிறுத்தும்படி கூட்டுறவுத் துறை உத்தரவிட்டது.
அரசாணை ரத்துசெய்ய மனு தாக்கல்
இந்த உத்தரவையும், அரசாணையையும் ரத்துசெய்யக்கோரி ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு (லேம்ப் - LAMP) கூட்டுறவுச் சங்கத்தின் தலைவரான ஜி. சென்றாயன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகளின் விசாரணை நீதிபதி ஆர். சுரேஷ்குமார் முன்பு நடைபெற்றுவந்தது. அப்போது மனுதாரர் சங்கம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.ஹெச். அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, சேலம் மாவட்டத்தில் மையத்தை அமைக்க ஆய்வு நடத்தப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன.
பின்னர், திடீரென கடந்த ஜூலை மாதம் முதலமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டதாகவும், அதன் பின்னர் தேசிய அளவிலான பயிற்சி நிறுவனம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.