’நான் கருப்பு எம்ஜிஆர், எம்ஜிஆர் ஆட்சியை என்னால் கொடுக்க முடியும், எம்ஜிஆரின் நீட்சி நான்...’ தமிழக அரசியலில் கால் பதிக்கும் ஒவ்வொரு புதியவரும் சொல்லும் வசனங்கள் இவை. நேற்றைய விஜயகாந்த் தொடங்கி இன்றைய கமல், ரஜினி வரை, எம்ஜிஆரையே நல்லாட்சிக்கான ரோல் மாடலாக காட்டி வருகின்றனர். பாஜகவோ இன்னும் ஒரு படி மேலே போய், சாவர்க்கர், ஷியாமா பிரசாத் முகர்ஜி, மோடி இருந்த இடத்தில், எம்ஜிஆரையும் சேர்த்து உரிமை கொண்டாடி வருகிறது. இவை அனைத்திற்கும் அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு புயல் கிளம்பினாலும், அது அன்றைய தொலைக்காட்சி செய்திகளின் இடைவேளையோடு வலுவிழந்து விடுகிறது.
கடந்த காலங்களில் காமராஜர் ஆட்சி என்று ஒலித்த குரல், தற்போது ராமாவரம் தோட்டத்து நாயகன் பக்கம் திரும்பியிருப்பதற்கு, புதிய தலைவர்கள் தரப்பில் ஞாயமும் தெரிவிக்கப்படுகிறது. ஏழைப்பங்காளன், மீனவ நண்பன், சத்துணவு திட்டம் தந்த கோமான் என்ற புகழ் அடைமொழிகளை அவர்கள் பட்டியலிடுகிறார்கள். ஆனாலும், இன்றைய தலைமுறைக்கு கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா அளவிற்கு அறிமுகமானவராக எம்ஜிஆர் இருக்கிறாரா? இறந்து இன்றோடு 33 ஆண்டுகள் கழிந்த பின்னும் அரசியல் ஒலிப்பெருக்கிகள் அவர் பெயரையே உச்சரிக்க காரணமென்ன? உண்மையிலேயே எம்ஜிஆர் ஆட்சி பொற்கால ஆட்சியா?
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், "நான் எம்ஜிஆர் மடியில் வளர்ந்தவன், தற்போது உள்ள பல அமைச்சர்கள் எம்ஜிஆரை பார்த்திருக்கக்கூட மாட்டார்கள், நான் எம்ஜிஆரின் நீட்சி” என்றும், விரைவில் கட்சி தொடங்க உள்ள நடிகர் ரஜினிகாந்த் 2018 ஆம் ஆண்டு நடந்த ஒரு விழாவில், "என்னால் அடுத்த எம்ஜிஆராக மாற முடியாது, ஆனால் எம்ஜிஆர் ஆட்சியை வழங்க முடியும்" என்று, தேர்தல் நெருங்கும் நேரத்தில் எம்ஜிஆரை மேடையேற்றுகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன்னை கருப்பு எம்ஜிஆர் என்றே அறிவித்துக் கொண்டார்.
இப்படி எங்கு திரும்பினும் எம்ஜிஆர் புராணங்கள் காதில் விழுந்து கொண்டிருந்தாலும், அவர் தமிழகத்தை ஆண்ட 13 ஆண்டுகளில் அப்படி என்ன நல்லாட்சியை தந்து விட்டார் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஆங்கில வழிக்கல்வியை புகுத்தி, கல்வியை தனியாருக்கு தாரை வார்த்து, முல்லைப் பெரியாற்றில் நமக்கான உரிமையை கேரளாவிடம் அள்ளிக்கொடுத்தது யார்? மருதூர் கோபாலன் மேனன் ராமச்சந்திரன் (எம்ஜிஆர்) தானே என்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். மேலும், மனிதரில் புனிதர், வள்ளல் என்ற அடைமொழிக்கும் எம்ஜிஆருக்கு சம்பந்தமே இல்லை என்னும் மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன், எம்ஜிஆர் ஆட்சி ஓர் போலீஸ் ஆட்சி என்கிறார்.