தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மெட்ரோ ரயிலின் 4ஆம் வழித்தடம் அமைக்கும் திட்டம்: அரசு பதிலளிக்க உத்தரவு

கோயில்கள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையை முடிக்காமல் சென்னை மெட்ரோ ரயிலின் 4ஆம் வழித்தடம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு, மெட்ரோ ரயில் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெட்ரோ ரயிலின் நான்காம் வழித்தடம் அமைக்கும் திட்டம்
மெட்ரோ ரயிலின் நான்காம் வழித்தடம் அமைக்கும் திட்டம்

By

Published : May 12, 2022, 5:21 PM IST

சென்னை: மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை நான்காம் வழித்தடம் அமைப்பது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில் அமைந்துள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில், வடபழனி வெங்கீஸ்வரர் கோயில், வடபழனி அழகர் பெருமாள் கோயில், விருகம்பாக்கம் சுந்தரவரதராஜ பெருமாள் கோயில், வளசரவாக்கம் வேல்வீஸ்வரர் கோயில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோயில் ஆகிய புராதன கோயில் கட்டடங்கள் அமைந்துள்ளன.

இந்த கோயில்கள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடவடிக்கைகளை முடிக்காமல், இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க கோரி சென்னையைச் சேர்ந்த கவுதமன், ரமணன், விஜய் நாராயணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அதில், மெட்ரோ ரயில் நான்காவது வழித்தடத்தில் உள்ள சாந்தோம் தேவாலயம், ரோசரி தேவாலயம் உள்ளிட்ட மூன்று தேவாலயங்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு பரிசீலிக்கப்பட்ட போதும், நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயில்கள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு பரிசீலிக்கப்படவில்லை. முதற்கட்ட பணிகள் நடந்தபோது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், விக்டோரியா அரங்கம் உள்ளிட்ட புராதன கட்டடங்கள் பாதிக்காத வகையில் சுரங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

நூறு ஆண்டுகளுக்கு மேலான கோயில்களின் பட்டியலை தயாரித்து, புராதன கட்டடங்களாக அறிவிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், பட்டியல் தயாரிக்காததால், மெட்ரோ ரயில் 4ஆவது வழித்தடத்தில் உள்ள கோயில்கள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்படவில்லை.

பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படுவதால் தேர் திருவிழா உள்ளிட்ட கோயில் உற்சவங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலுக்காக அரசு மற்றும் தனியார் சொத்துக்களை கையகப்படுத்துவதை விடுத்து கோயில் நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது.

மெட்ரோ ரயில் நான்காம் வழித்தடத்தால் பாதிக்கப்படும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உள்பட ஏழு கோயில்களையும் புராதன கட்டடங்களாக அறிவிக்க வேண்டும். இந்த கோயில்கள் குறித்து சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்க மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் மெட்ரோ ரயில் நான்காம் வழித்தட பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்" என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (மே.12) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து தமிழ்நாடு அரசு, மெட்ரோ ரயில் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு, ஏற்கனவே உள்ள வழக்கோடு சேர்க்க உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:'பட்டினப்பிரவேசத்துக்கு போலீஸ் பாதுகாப்புக்காக விண்ணப்பியுங்கள்' - தருமபுரம் ஆதீனத்துக்கு அறிவுறுத்திய உயர் நீதிமன்றம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details