சென்னை:வடகிழக்குப் பருவமழை தொடங்கிய பின்பு மெட்ரோ ஏரிகள், இதர நீர்வள ஆதாரங்கள் அனைத்தும் நிரம்பிவழிந்தன. அதனைத் தொடர்ந்து மெட்ரோ ஏரிகளைக் கண்காணித்து வெள்ளப் பெருக்கைத் தவிர்க்க பொதுப்பணித் துறை அலுவலர்கள் உபரி நீரை வெளியேற்றிவந்தனர்.
குறிப்பாக பூண்டி ஏரியில் கிருஷ்ணா நதிநீர், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையினால் நீர்வரத்து தொடர்ந்து வந்ததை அடுத்து பொதுப்பணித் துறை அலுவலர்கள் உபரி நீரை கொசஸ்தலையாறு வழியாகத் திறந்துவிட்டனர். மேலும் செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளிலிருந்தும் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
இது குறித்துப் பொதுப்பணித் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பே நல்ல மழைப்பொழிவு இருந்தது. இதனால் ஏரிகள், குளங்கள் மழை நீரில் நிரம்பிவழிந்தன. மேலும் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய பின்பு மழைப்பொழிவு அதிகமாக இருந்த காரணத்தால் உபரி நீரை வெளியேற்றினோம்.