சென்னை:நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், தென்மேற்கு பருவமழை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தீவிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பதிவாகியுள்ளது. எட்டு இடங்களில் கனமழையும் ஒரு இடத்தில் மிக கனமழையும் பெய்துள்ளது. அந்த வகையில் நாகை மாவட்டம் திருக்குவளையில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
122 ஆண்டுகளுக்குப் பின் நல்ல மழை: திருநெல்வேலி, நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட 18 மாவட்டங்கள் தென்மேற்கு பருவ மழைக்காலத்தில் 100 சதவிகிதத்திற்கும் மழை அளவு பதிவாகியுள்ளது. கடந்த 122 ஆண்டுகளில் தென்மேற்கு பருவ மழை காலத்தில் மூன்றாவது முறையாக ஆகஸ்ட் மாதத்தில் அதிக சதவீத மழை பதிவாகியுள்ளது.
குறிப்பாக, 1906ஆம் ஆண்டில் 112 சென்டிமீட்டரும், 1909ஆம் ஆண்டு 127 சென்டிமீட்டரும், 2022ஆம் 93 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை தென்மேற்கு பருவமழை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 செ.மீ. மழை, இயல்பான மழை அளவு 21 செ.மீ. பதிவாகியுள்ளது. இது இயல்பான அளவைவிட 88 சதவீதம் அதிகமாகும்.
கனமழைக்கு வாய்ப்பு: வட தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இரண்டு, மூன்று தேதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் கள்ளக்குறிச்சி, தர்மபுரி உள்ளிட்ட வட தமிழ்நாடு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:இந்தியா - நேபாளம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்... மத்திய அமைச்சரவை ஒப்புதல்...