சென்னை: தென்மேற்குப் பருவக்காற்று, வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக இன்று (செப்டம்பர் 29) சேலம், தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தென்மேற்குப் பருவக்காற்று, வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு - புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழையும், சேலம், தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.
இந்த மாவட்டங்களுக்கெல்லாம் கன மழை
நாளை தமிழ்நாடு - புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.