சென்னை:பொது விநியோக திட்டத்தின் கீழ், பருப்பு, எண்ணெய் கொள்முதலுக்கான ஏல அறிவிப்பை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி வெளியிட்டது. இந்த ஒப்பந்தப்புள்ளிக்குத் தடை விதிக்கக் கோரி, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில், முந்தைய நிபந்தனைகளைப் பின்பற்றாமல் தற்போது புதிய நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், முந்தைய நிபந்தனைகள் படி, ஒப்பந்தப்புள்ளியில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள், கடைசி மூன்று ஆண்டுகளில் 71 கோடி ரூபாய்க்கு மூலதன விற்று முதல் கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள நிபந்தனையில், கடைசி மூன்றாண்டுகளில் 11 கோடி ரூபாய் மூலதன விற்று முதல் இருந்தால் போதும் எனக் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழ்நாடு அரசின் ஒப்பந்தப்புள்ளிக்கு இடைக்கால தடை விதித்து நேற்று (மே.26) உத்தரவிட்டது.
இந்தத் தடையை நீக்கக் கோரி அரசுத் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையிடப்பட்டது. அப்போது, இதுசம்பந்தமாக மதுரைக் கிளையை தான் அணுக வேண்டும் எனத் தெரிவித்தனர்.
அதற்கு, கரோனா ஊரடங்கு காலம் என்பதால் பொது விநியோக திட்டத்தின் கீழ் மக்களுக்கு பருப்பு, எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டியுள்ளதாகவும், தடை விதித்த நீதிபதி தலைமையில் தான் இரு நீதிபதிகள் அமர்வு உள்ளதாகவும், அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுவாகத் தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதியளித்து உத்தரவிட்டனர்.