சென்னை: மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ராமநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தனது 61 வயது மகன் சாய்குமார் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் கடந்த 1992ஆம் ஆண்டு முதல் தான் பெற்று வரும் ஒய்வூதிய தொகையை தனது மறைவுக்கு பிறகு சாய்குமார் பெறுவதற்கு, மனநலம் பாதிக்கப்பட்டவருக்கான சான்றிதழ் கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனைக்கு சாய்குமாரை அழைத்து செல்ல முடியாத நிலையில், அரசு உரிய நடவடிக்கை எடுத்து சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத மனநலம் பாதிக்கப்பட்டவரை எப்படி பரிசோதனை செய்வது? என்று அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து நீதிபதி பல்வேறு நீதிமன்றங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், கண்பார்வை இல்லாதோர், உடல் ஊனமுற்றவர்களுக்கும் அனைத்து உரிமைகளும் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால், கண் பார்வை இல்லாதவர்களுக்கு மட்டுமே இங்கே உரிமைகள் வழங்கப்படுகிறது. மற்ற பிரிவினருக்கு வழங்கப்படுவது குறைவாகவே உள்ளது என்று வேதனை தெரிவித்தார்.
சட்டரீதியாக அனைவருக்கும் சமமான உரிமைகள் உள்ள நிலையில், பாரபட்சமாக செயல்பட கூடாது என்றும், தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டம் போல, மனநலம் மற்றும் உடல் ஊனமுற்றவர்களின் வீடுகளுக்கே அதிகாரிகள் சென்று நேரடியாக பரிசோதனை செய்து சான்றிதழ்களை வழங்கலாம் என்று உத்தரவிட்டார்.
சாதாரண பலூன்களை பார்த்தால் ஏமாந்துவிடும் குழந்தைகள் மத்தியில், வெளியில் வர முடியாத மனநலம் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக வரச்செய்து சான்றிதழ் அளிப்பது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், மருத்துவத்துறையில் இந்தியாவில் சிறந்த எடுத்துக்காட்டாக தமிழகம் செயல்படுவது பாராட்டுக்குரியது- அரசின் சேவைகள் கடைசி நபரின் தேவைகளை அணுகி நிவர்த்தி செய்யும் அளவுக்கு இணக்கமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கல்விச்சான்றிதழ்கள் சந்தைப் பொருளல்ல - உயர் நீதிமன்றம்!