தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவிஷீல்ட் தடுப்பூசி தன்னார்வலருக்கு செலுத்தப்பட்டதா? - ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு மட்டுமே தெரியும் என நிபுணர்கள் கருத்து - covid 19 Vaccine

சென்னை: கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்ட சென்னையைச் சேர்ந்த ஒருவர், கடுமையான உடல் நலம், மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கோவிஷீல்ட் தடுப்பூசி
கோவிஷீல்ட் தடுப்பூசி

By

Published : Nov 29, 2020, 7:43 PM IST

Updated : Nov 29, 2020, 9:29 PM IST

கரோனா வைரஸ் தொற்றுக்கு பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளது. ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் செயல்பட்டு வரும் "சீரம்" ஆராய்ச்சி நிறுவனம், பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள, கரோனா தடுப்பூசியை, "கோவிஷீல்டு" என்ற பெயரில் பிரிட்டனின் ஆஸ்ட்ரா ஜெனகா என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த தடுப்பூசி, பிரிட்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் கரோனா தடுப்பூசியை, மனிதர்களிடம் சீரம் நிறுவனம் செலுத்தி பரிசோதித்து வருகிறது. தன்னார்வலர்களுக்கு சோதனையின் அடிப்படையில் செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ராமசந்திரா மருத்துவமனை மூலம் இந்த தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்ட சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 40 வயதான ஒருவர், தடுப்பூசியால் கடுமையான உடல் உபாதைகள், மனரீதியான பிரச்னையை சந்தித்துள்ளதால், ரூ. 5 கோடி நஷ்ட ஈடு வழங்கக் கோரி அவரது வழக்கறிஞர் மூலம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், சீரம் இன்ஸ்ட்டிடியூட், ராமச்சந்திரா மருத்துவமனை ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மேலும், கடுமையான உடல் உபாதைகள், மூளை வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மறைத்து அதுகுறித்து கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பரிசோதனையைத் தொடர்வது சமூகத்துக்கு எதிரானது எனவும், மேற்கொண்டு மனிதர்களிடம் பரிசோதனையை தொடர்வதையோ? தடுப்பூசி தயாரிப்பதையோ? விநியோகிப்பதையோ? உடனடியாக நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், சீரம் இன்ஸ்ட்டிடியூட், இந்திய மருந்து கட்டுப்பாட்டு துறை இயக்குநர், ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனம், தடுப்பூசிக்கு தலைமை தாங்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆண்ட்ரூ பொல்லார்ட், ராமச்சந்திரா மருத்துவமனை ஆகியோருக்கு வழக்கறிஞர் என்ஜிஆர் பிரசாத் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதனிடையே, பாதிக்கப்பட்டவரின் மனைவி கூறும்போது, "கரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு முன் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அக்டோபர் மாதம் 1ஆம் தேதி ஊசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு, சதாரணமாக வரக்கூடிய காய்ச்சல், வாந்தி, தலைவலி போன்றவை இருந்தன. ஆனாலும், அவர் நன்றாக இருந்தார். அக்டோபர் 11ஆம் தேதி உடலில் வலி ஏற்படுவதாக கூறியதுடன், மிகவும் சோர்வாக காணப்பட்டார். எங்களுக்கு திருமணம் நடைபெற்று 14 ஆண்டுகளில் அவர் சோர்வாகவும், வழங்கமான பணியில் மாற்றம் இருந்ததை முதல் முறையாக கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

ராமசந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தன்னார்வலர்களுக்கு மருந்து அளிக்கும் போது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி கூறியதுடன், படிவத்திலும் எழுதி வாங்கினர். அப்போது தடுப்பூசி அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பக்கவிளைவுகள் ஏற்படாது என கூறினர். எனது கணவர் பாதிக்கப்பட்டுள்ளதால், தற்போது பரிசோதனையை நிறுத்தி வைத்து ஆய்வு மேற்கொண்ட பின் பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்து பரிசோதனையை தொடங்க வேண்டும்" என்றார்.

கரோனா தடுப்பூசி பரிசோதனை குறித்து, நுண்ணுயிரியல் மற்றும் வைராலஜித் துறையின் மருத்துவர் ஜேக்கப்ஜான் கூறும்போது, "தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு பக்கவிளைவுகள் இருப்பதால்தான் மிகவும் பாதுகாப்பாக பரிசோனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். முதல்முறையாக இந்த தடுப்பூசி கண்டறியப்பட்டுள்ளதால், மனிதர்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டும். அப்படி பரிசோதனை செய்யும் போது சிலருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மருந்து சேர்க்கப்படும். அந்த மருந்தால் வரும் பாதிப்புகள் தடுப்பூசியின் பாதிப்பு கிடையாது. தடுப்பூசி செலுத்தியதால் பாதிப்பு ஏற்படுவது உறுதியானால் அது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கோவிஷீல்ட் தடுப்பூசி பரிசோதனையை நிறுத்தி வைப்பது என்பது மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் முடிவாகும். தன்னர்வலர்களுக்கான நலனை பாதுகாக்கும் வல்லுநர் குழுவினர் சேர்ந்து ஆராய வேண்டும்" என்றார்.

மருத்துவ நுண்ணுயிரியல் துறையின் பேராசிரியர் கூறும்போது, "கோவிஷீல்ட் தடுப்பூசி யாருக்கு கொடுக்கப்படுகிறது என்பது அதனை அளிக்கும் மருத்துவருக்கும், செலுத்திக்கொள்ளும் தன்னார்வலருக்கும் தெரியாது. எந்த மருந்து யாருக்கு கொடுக்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது. தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு நோய் பாதிப்பு வருகிறதா? என்பதை கண்காணிப்பார்கள். தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி செலுத்தியப் பின்னர் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்.

தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டதா? தடுப்பூசி போன்ற மருந்து அளிக்கப்பட்டதா? என்பது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு மட்டும் தான் தெரியும். தன்னார்வலர்களுக்கு எந்த மருந்து அளிக்கப்பட்டது என்பதற்கான ரகசியத்தையும் குழுவின் முன்பு தான் பிரிக்கப்படும். இது குறித்த முழுமையான விவரங்கள் ஆக்ஸ்போர்டின் தலைவர் பேராசிரியர் ஆண்ட்ரூ பொல்லார்ட்க்குதான் தெரியும்" என்றார்.

Last Updated : Nov 29, 2020, 9:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details