சென்னை: மாநிலம் முழுவதும் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. 200 வார்டுகளைக் கொண்ட சென்னை மாநகராட்சியில் தேர்தலை முன்னிட்டு பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எவையென கண்டறிந்து, அங்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிசெய்யும் வகையில் மாவட்டத் தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி,
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட காவல் துறை உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்திற்குப் பிறகு மாவட்டத் தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளரைச் சந்தித்தனர்.
பயிற்சி வகுப்புகள்
அப்போது பேசிய ககன்தீப் சிங் பேடி, நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 27 ஆயிரம் தேர்தல் பணியாளர்களைப் பயன்படுத்த உள்ளதாகவும், அவர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் ஏற்கனவே நடத்தப்பட்ட நிலையில், வரும் 10ஆம் தேதி இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், நேற்று முன்தினம் (பிப்ரவரி 2) வரை 418 நபர்கள் வேட்புமனு தாக்கல்செய்துள்ளனர் எனவும், 32 வார்டுகளில் ஒருவர்கூட இதுவரை வேட்புமனு தாக்கல்செய்யவில்லை என்றும் அவர் கூறினார். நாளையுடன் (பிப்ரவரி 5) வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில், வரும் பிப்ரவரி 7ஆம் தேதி 3 மணி வரை வேட்புமனுக்களைத் திரும்பப் பெற அவகாசம் இருக்கிறது என்றார்.
அதுமட்டுமல்லாமல், வேட்பாளர்கள் வாக்குச் சேகரிக்க வீடு வீடாகச் செல்லும்போது கூட்டமாகச் செல்லக் கூடாது எனவும், பிப்ரவரி 11ஆம் தேதிக்கு மேல் சாலைப் பேரணி, பொதுக்கூட்டம் உள்ளிட்டவை நடத்துவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், 100 பேருக்கு மிகாமல் உள்ளரங்கு கூட்டங்கள் நடத்த மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.