அரசுப்பள்ளிகளில் படித்து, நீட் தேர்வில் தேர்ச்சிப் பெறும் மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில் சேர தனி இடஒதுக்கீடு அளிப்பது குறித்து ஆய்வுசெய்யும் குழுவின் தலைவராக, ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கலையரசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையிலான குழு அதற்கான பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டுவருகிறது.
அதன்படி, அரசுப் பள்ளிகளில் கடந்தாண்டு படித்த மாணவர்களின் எண்ணிக்கை, மருத்துவப் படிப்பில் அவர்களுக்கு கிடைத்த இடங்கள், மேலும் நீட் தேர்வில் மாணவர்களுக்கு இடங்கள் கிடைப்பதற்கான மதிப்பெண் அடிப்படை போன்றவை குறித்து இக்குழு தீவிரமாக ஆலோசித்துவருகிறது. அதுமட்டுமின்றி கல்வியாளர்கள், பெற்றோர் ஆகியோரிடம் இது குறித்து கருத்துகளும் கேட்கப்பட்டுவருகின்றன.
முதலாவதாக சேலத்தில் பெற்றோர், கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் கருத்துக் கேட்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தனது பரிந்துரையை அரசுக்கு மே மாத இறுதிக்குள் அளிப்பதற்கும் குழு முடிவு செய்துள்ளது.