கரோனா ஊரடங்கு காலத்தில் நடிகர் ரஜினிகாந்த் முதல்முறையாக ஜூலை20ஆம் தேதி, மதியம் தனது போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து முகக்கவசத்துடன் லம்போர்கினி காரை ஓட்டிச் செல்லும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் வெளியானது.
அதன் பின்னர், கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு ரஜினிகாந்த் ஓய்வுக்காக சென்றது தெரியவந்தது. அவருடன் சவுந்தர்யா அவரது கணவர் விசாகன் மற்றும் மகன் வேத் ஆகியோர் உடன் சென்றிருக்கின்றனர்.
கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் மருமகன், மகள், பேரனுடன் ரஜினிகாந்த்! இந்த நிலையில், ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு முறையான அனுமதி பெற்று சென்றாரா? என்ற கேள்விக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பதில் கூறினார். அப்போது, “இ-பாஸ் வாங்காமல் போயிருந்தால் அந்த மாவட்ட அளவில்தான் நடவடிக்கை எடுக்க முடியும். இந்த விவகாரம் குறித்து நான் விசாரித்துச் சொல்கிறேன்” என்றார். இதனால் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
இந்நிலையில் இன்றைய தேதியில் (ஜூலை23) ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்றுள்ளார். அந்த இ-பாஸில் மருத்துவ எமர்ஜென்ஸி என குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் முன்னர் கேளம்பாக்கம் சென்றபோது இ-பாஸ் எடுத்தாரா? என்ற சர்ச்சை வெளியான நிலையில் புதிய இ-பாஸ் ஒன்றை ரஜினிகாந்த் பெற்றுள்ளார். ஆகவே, அந்தச் சர்ச்சையை நீர்த்து போக செய்ய இந்த புதிய இ-பாஸ் எடுக்கப்பட்டதா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய மூன்று காரணங்களுக்காகவும், சில தவிர்க்க முடியாத காரணங்களுக்கும் வெளியூர் செல்லஇ-பாஸ் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியணும்; கந்தனுக்கு அரோகரா' - ரஜினி ட்வீட்