சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில், கடந்த 11-ம் தேதி வரை, மருத்துவ சேர்க்கைக்கான மாணவர் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது.
இதுகுறித்து மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழு செயலாளர் வசந்தாமணி வெளியிட்டுள்ள தகவலில், ’அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் முதல் சுற்றில் 7 ஆயிரத்து 18 இடங்களுக்கான கலந்தாய்வு நான்கு கட்டங்களாக நடத்தப்பட்டது என்றும், அதில் 816 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கற்பக விநாயகா கல்லூரியில் புதிதாக 50 இடங்கள் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டதாகவும், அதனுடன் சேர்த்து 7 ஆயிரத்து 68 இடங்களுக்கு நடத்தப்பட்ட கலந்தாய்வில், 866 இடங்கள் நிரப்பப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாப் ஆப் எனப்படும் கலந்தாய்வில், முத்துக்குமரன் மருத்துவக்கல்லூரியில் புதிதாக 150 இடங்கள் சேர்க்கப்பட்டு, 7 ஆயிரத்து 218 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டதாகவும், இதில் 492 இடங்கள் காலியாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மாப் ஆப் கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டு நடத்தப்பட்டது. இந்தக் கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்தவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு ஏப்ரல் 10-ம் தேதி பிற்பகல் 2 மணி வரை அனுமதி வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஏப்ரல் 11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதால், தமிழ்நாட்டிலும் 11-ம் தேதி வரை கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டது என்றும், இந்த கலந்தாய்வு மூலம் 7 ஆயிரத்து 268 இடங்களும் நிரப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்தாய்வில் மாணவர்கள் சேராமல் காலியாக இருந்த இடங்கள், தரவரிசைப் பட்டியல் அடிப்படையில், கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்கி ஒப்படைக்கப்பட்டு, அரசு ஒதுக்கீட்டிற்குரிய 15 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டிற்கான 127 இடங்களும் ஸ்டே வேகன்சியில் நிரப்பப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அன்னபூரணம் மருத்துவக்கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்களில் 4 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 14 இடங்களும் எம்.பி.பி.எஸ் படிப்பில் காலியாக உள்ளது. அதேபோல் பி.டி.எஸ் படிப்பில் சுமார் 300 இடங்கள் காலியாக உள்ளன. பல் மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான மதிப்பெண்களைக் குறைத்து வழங்கினால், அதன் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும் எனவும்’ தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இனி ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் கிடைக்கும்' - அமைச்சர் நாசர் அறிவிப்பு