இது தொடர்பாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தமிழ்நாடு அரசே ஏற்றுள்ளது. அதேபோல், இப்பல்கலைக்கழகத்துடன் இணைந்திருந்த, ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி, கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்படும் என அரசு அறிவித்து அவ்வாறே செயல்பட்டும் வருகிறது.
இந்நிலையில், இக்கல்லூரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட கூடுதலான கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு ரூ.5 லட்சத்து 54 ஆயிரமும், பிடிஎஸ் மாணவர்களுக்கு ரூ.3 லட்சத்து 40 ஆயிரமும், முதுநிலை டிப்ளமோ படிப்புக்கு ரூ.8 லட்சமும், முதுநிலை மருத்துவப்படிப்பிற்கு ரூ.9.8 லட்சமும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
அதே சமயம், தமிழ்நாடு அரசின் மற்ற மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கு ரூ.13,600, பல் மருத்துவப்படிப்பிற்கு ரூ.11,600, முதுநிலை மருத்துவப்படிப்பிற்கு ரூ.32,500 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதிக அளவிலான கட்டணத்தால், இக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.