தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

புதுச்சேரி மருத்துவக் கல்லூரிகளுக்கு அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு - புதுச்சேரி மருத்துவ கல்லூரிகள்

சென்னை: கலந்தாய்வில் கலந்துகொள்ளாத மாணவர்களைச் சட்டவிரோதமாகச் சேர்த்த புதுச்சேரியைச் சேர்ந்த ஆறு மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா ஐந்து லட்சம் என 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெட்ராஸ் உயர்நீதி மன்றம்
மெட்ராஸ் உயர்நீதி மன்றம்

By

Published : Oct 7, 2020, 4:28 PM IST

புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் - நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில், 2017-18ஆம் கல்வியாண்டில் மருத்துவ மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ளாத மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

கலந்தாய்வில் கலந்துகொள்ளாமல் சட்டவிரோதமாகச் சேர்க்கப்பட்ட மாணவர்களை நீக்கம்செய்து, இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து மாணவர்கள் தாக்கல்செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மருத்துவக் கவுன்சில் உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்ததுடன், தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதியளித்தது.

அதன்படி தற்போது அந்த மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டனர். இதற்கிடையில், புதுச்சேரியில் உள்ள ஏழு மருத்துவக் கல்லூரிகளின் கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவர்கள், தங்களுக்குச் சேர்க்கை வழங்கக் கோரியும் வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த அனைத்து வழக்குகளையும் விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மாணவர்களை நீக்கம்செய்து மருத்துவக் கவுன்சில் பிறப்பித்த உத்தரவை உறுதிசெய்து தீர்ப்பளித்தார்.

மேலும், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்தி, மாணவர்களைச் சேர்த்த அறுபடை வீடு மருத்துவக் கல்லூரி, வினாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி, ஸ்ரீமகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி, மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி, வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் ஆகிய ஆறு மருத்துவக் கல்லூரிகளுக்கும் தலா ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அத்தொகையை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும், புதுச்சேரி அரசின் கரோனா நிவாரண நிதிக்கும், சென்னையில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கும் நான்கு வாரங்களில் வழங்க உத்தரவிட்டு, அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தார்.

கல்வி சம்பந்தப்பட்ட வழக்குகளில் குறிப்பிட்ட கல்வியாண்டுக்குள்ளேயே தீர்வு காண வேண்டும் எனவும், குறிப்பாக மருத்துவக் கல்வி சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதிமன்றங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், சட்டவிரோத மாணவர் சேர்க்கைக்கு கருணை காட்டினால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் எனவும் நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ், தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details