தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத திருவள்ளூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் 2021–22 ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தமிழக அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது.
மத்திய அரசின் 60% நிதியுதவியுடன் கட்டப்படவுள்ள இந்த மருத்துவக் கல்லூரிகள், தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி கட்டப்படுகின்றனவா? என்பது குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைக்கக் கோரி, திருவாரூர் மாவட்டம், முடிகொண்டானைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அதில், தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி, மருத்துவக் கல்லூரிகள் 75 ஆயிரத்து 676 சதுர மீட்டர் பரப்பளவுக்கு கட்டப்பட வேண்டும் எனவும், கூட்ட அரங்கு ஆயிரத்து 200 சதுர மீட்டர் பரப்புக்கு கட்டப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விதிகளை மீறி திருப்பூர் மருத்துவக் கல்லூரியில் 3 ஆயிரத்து 107 சதுர மீட்டர் பரப்புக்கு கூட்ட அரங்கு கட்டப்படுவதாக மனுவில் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.