மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி விற்பனைக்கு தடை - Prohibition of sale of meat on the eve of Mahavir Jayanti
சென்னை: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, அனைத்து இறைச்சிக்கூடங்களும் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி மூடப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறை (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் அனைத்தும் ஏப்ரல் 25ஆம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன. இதேபோல் ஆடு, மாடு, இதர இறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும், பல்பொருள் அங்காடிகள், வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே, ஏப்ரல் 25 ஞாயிற்றுக்கிழமை இறைச்சி விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு உத்தரவினை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.