சென்னை சேப்பாக்கத்தில் ஆடு, கோழி இறைச்சி விலை உயர்வு தொடர்பாக சில்லறை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஜச்தக் பாஷா, ஆசிப் பாஷா ஆகியோர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது, முன்பெல்லாம் ஏதேனும் ஒரு சில மாதங்களில் மட்டுமே இறைச்சி விலை அதிகரிக்கும், ஆனால் தற்போது 150 ரூபாய் வரை இறைச்சிகளின் விலை அதிகரித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் நாங்கள் ஏமாற்றுவதாக நினைத்து எங்களை கேள்வி கேட்கிறார்கள்.
ஆட்டிறைச்சி கிலோ 800 ரூபாய்க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். தங்கத்தின் விலையேற்றம் குறித்து தினமும் எழுதி வைக்கப்படுகிறது. ஆனால் ஆட்டிறைச்சி விலை அவ்வாறு எழுதப்படுவதில்லை.
விலை நிலையாக இல்லாமல் இருப்பதால் பாதிப்பு ஏற்படுகிறது. முன்பெல்லாம் 40 ரூபாய் வரை விலை ஏறும், தற்போது 150 ரூபாயை தாண்டியுள்ளது. வெங்காய விலை ஏற்றத்தால் இறைச்சி விலையையும் உயர்த்தியுள்ளீர்களா என வாடிக்கையாளர்கள் எங்களை கேள்வி கேட்கிறார்கள்.