விடுதலைப் புலிகள் மீதான தடையை விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா திங்ரா சேகல் தலைமையில் விசாரணை அமர்வு சென்னை வாலாஜா சாலையிலுள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. இன்று நடந்த விசாரணையில் மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ பங்கேற்று தன் கேள்விகளை முன்வைத்துள்ளார்.
விசாரணைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, “தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு பின் 2014இல் அது ஐந்து ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது. தற்போது ஐந்து ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. விடுதலைப் புலிகள் மீதான தடை சரிதானா என்பதை ஆராய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி, தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. 2010, 2012, 2014ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் நீதிபதிகளாக இருந்தவர்கள், என் தரப்பு வாதத்தையும் கேட்டால் தான் நியாயம் கிடைக்கும் என்கிற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, என்னை அந்த விசாரணையில் பங்கேற்க அனுமதித்தார்கள்.
அதை நான் நீதிபதியிடம் கூறினேன். அவரும் அதனை ஏற்றுக்கொண்டார். ஆனால் சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்ய, இதற்கு முன்பு மூன்று முறை எனக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று எனக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. என்றாலும் நான் கேள்விகளைக் கேட்டேன். இன்று ஐந்து சாட்சிகளை விசாரித்துள்ளார்கள். விடுதலைப் புலிகளை அழித்துவிட்டொம் என்று சொல்கிறார்கள். ஆனால் பிரபாகரன் படம் போட்ட நாள்காட்டி, புத்தகங்களை விநியோகித்தார்கள் என்று இரண்டு இலங்கைத் தமிழர்களைக் கைது செய்துள்ளனர். நாளைக்கு முக்கியமான சாட்சி வருவதாகக் கூறியிருக்கின்றனர்.