தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'இனி சத்துணவுத் திட்டம், மக்கள் திலகத்தின் சத்துணவுத் திட்டமாக இருக்காது' - வைகோ கண்டனம் - சத்துணவுத் திட்டம்

சென்னை: சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் காலை சத்துணவு வழங்கும் பொறுப்பை இந்துத்துவ அமைப்பிடம் வழங்கினால், இனி சத்துணவுத் திட்டம், மக்கள் திலகத்தின் சத்துணவுத் திட்டமாக இருக்காது என்றும், மனுதர்ம சத்துணவுத் திட்டமாகி விடும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

condemns
condemns

By

Published : Feb 17, 2020, 12:23 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” நீதிக்கட்சி அரசால் சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, காமராஜரால் விரிவுபடுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம், எம்.ஜி.ஆர். காலத்தில், சத்துணவுத் திட்டமாக வளர்ச்சி பெற்றது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் 24 பள்ளிகளில், 5,785 மாணவர்களுக்கு மட்டும், காலை சத்துணவு கொடுக்கும் திட்டத்தைத், தமிழ்நாடு அரசு தொடங்கி இருக்கிறது. ஆனால், இந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசு நடத்தப்போவது இல்லை. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட, 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' இயக்கத்தை நடத்தி வருகின்ற இஸ்கான் என்ற இந்துத்துவ அமைப்பிடம் ஒப்படைத்து விட்டார்கள்.

அதற்காக, சென்னை மாநகரின் மையமான கிரீம்ஸ் சாலையில் 20,000 சதுர அடி, பெரம்பூர் பேரக்ஸ் பகுதியில் 35,000 சதுர அடி நிலத்தை, அந்த அமைப்பிற்கு தமிழ்நாடு அரசு தாரை வார்த்துக் கொடுத்து விட்டது. எல்லாமே ரகசியமாகவே நடைபெற்று இருக்கிறது. இது சட்டத்திற்கு எதிரானது.

யாருடைய கட்டாயத்திற்கோ எடப்பாடி அரசு அடிப்பணிந்து இருக்கின்றது. லட்சக்கணக்கான சத்துணவுப் பணியாளர்களின் உழைப்பில் வெற்றிகரமாகச் செயல்பட்டு, இன்று இந்தியாவுக்கே வழிகாட்டிக் கொண்டு இருக்கின்ற சத்துணவுத் திட்டத்தை, முழுமையாகத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான தொடக்கம்தான், இந்தப் புதிய திட்டம்.

இந்த இஸ்கான் அமைப்பு, ஏற்கனவே கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருகின்ற சத்துணவில், வெங்காயம், பூண்டு கலக்காத சாம்பாரைக் கொடுத்தது. அதனால் மாணவர்கள் சாப்பிட முடியாமல் வாந்தி எடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தமிழ்நாட்டில் சத்துணவில் முட்டை வழங்கப்பட்டு வருகின்றது.

இஸ்கான் அமைப்பு சைவ உணவை வலியுறுத்துவது ஆகும். இந்நிலையில், இந்த அமைப்பு தமிழர்களின் உணவுப் பழக்கத்திற்கு எதிராகவே செயல்படும். எனவே, இனி சத்துணவுத் திட்டம், மக்கள் திலகத்தின் சத்துணவுத் திட்டமாக இருக்காது. மனுதர்ம சத்துணவுத் திட்டமாகி விடும். எனவே, மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் பொறுப்பை தமிழக அரசே ஏற்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ‘மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் அட்சய பாத்திரா திட்டம்’

ABOUT THE AUTHOR

...view details