சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ”சுதந்திர இந்தியாவில் அண்மைக்காலமாக அடுக்கடுக்கான அபாயகரமான முடிவுகளை மோடி அரசு எடுத்துவருகிறது. காஷ்மீர் மக்களுக்குத் தந்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு 370ஆவது சட்டப்பிரிவை நீக்கியதால் காஷ்மீர் பற்றி எரிகிறது.
எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து எந்த மத நம்பிக்கையுடையவரும் இங்கு வந்து குடியுரிமைப் பெறலாம், ஆனால் இஸ்லாமியர்களுக்கு அது பொருந்தாது எனக் கூறுவது, மீண்டும் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றதற்குச் சமமாகும்.
இனப்படுகொலை செய்த கோத்தபய ராஜபக்சவுடன் கரம் குலுக்கிக் கொண்டு இருக்கிறார்கள். 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கள அரசால் இனப்படுகொலைக்கு ஆளாகிவந்து இங்கே தங்கியுள்ளத் தமிழர்கள் பற்றி எந்தக் கவலையும் இந்த அரசிற்கு இல்லை. இது வருங்காலத்தில் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும்.