சென்னை:எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதது குறித்து மருத்துக்கல்வி மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் வசந்தாமணி நமது ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், “மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்டு வருகிறது. மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு 22ஆம் தேதி 12 மணி வரையில் 12ஆயிரத்து 551 பேர் பதிவு செய்துள்ளனர்.
அவர்களில் விண்ணப்பங்களை அரசு ஒதுக்கீடடு இடங்களுக்கு 3ஆயிரத்து 370 நபர்களும், சுயநிதிக்கல்லூரியிலுள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆயிரத்து 631 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர். மருத்துவ படிப்பில் சேர்வதற்கு ஜனவரி 7ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜனவரி 10ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மருத்துவக்கல்வி மாணவர்கள் சேர்க்கைக்குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளும், கேகேநகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியும் சேர்த்து 37 கல்லூரியில் மாநில ஒதுக்கீட்டில் 4ஆயிரத்து 308 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரியில் ஏற்கனவே 18 உள்ளன. மேலும், புதியதாக விவேகானந்தா மருத்துவக் கல்லூரி, அருணை மருத்துவக் கல்லூரியில் தலா 150 மாணவர்கள் வீதம் 300 மாணவர்கள் சேர்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது. அத்துடன் சேர்த்து 20 சுயநிதி மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.
18 சுயநிதி மருத்துவக் கல்லூரியில் 2ஆயிரத்து 650 இடங்களில் அரசு ஒதுக்கீட்டில் ஆயிரத்து 483 இடங்களிலும், சுயநிதிக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில் ஆயிரத்து 166 இடங்களும் உள்ளன. மேலும், அரசு பல்மருத்துவக் கல்லூரிகள் 2-ல் 165 இடங்களும், 18 சுயநிதிப் பல்மருத்துவக் கல்லூரிகளிலுள்ள ஆயிரத்து 125 இடங்களுக்கும், நிர்வாக ஒதுக்கீட்டிலுள்ள 635 இடங்கள் என 6ஆயிரத்து 958 எம்பிபிஎஸ் இடங்களுக்கும், ஆயிரத்து 925 பிடிஎஸ் இடங்கள் என 8ஆயிரத்து 883 இடங்களில் மாணவர்கள் கலந்தாய்வு மூலம் சேர்க்கப்படவுள்ளனர்.