சென்னை:தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான முதல் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டு முடிவடைந்துள்ளது. இந்த முதல் கட்ட கலந்தாய்வில் 6 ஆயிரத்து 82 இடங்களில் 5995 பேர் இடங்களை தேர்வு செய்துள்ளனர்.
மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டு இடங்களை தேர்வு செய்து மாணவர்களுக்கும், அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களை தேர்வு செய்த மாணவர்களுக்கும் முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று(பிப்ரவரி 14) முதல் தொடங்கும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்திருந்தது.
அதனடிப்படையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்கின.
பூச்செண்டு கொடுத்து வரவேற்ற சீனியர்ஸ்!
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரிக்கு வருகை தந்த மாணவர்களை பூச்செண்டு கொடுத்து மூத்த மாணவர்கள் வரவேற்றனர். மேலும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி குறித்து முதல்வர் ஜெயந்தி விளக்கினார்.