இதையொட்டி அமமுக பொதுச்செயளாலர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகை வாழ்விக்கும் சக்தி உழைப்புதான் என்பதை நிரூபிக்கும் உழைப்பாளிகள் அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உரிமைகளுக்காக போராடி வென்ற உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றும் மே தினத்தில், ஒவ்வொன்றையும் நமக்கு உருவாக்கித் தந்திருக்கும் உழைப்பாளர்களை நன்றியோடு நினைவு கூர்வோம்.
உலகம் இதுவரை சந்தித்திராத சூழ்நிலையில் கூட எத்தனையோ பேரின் உழைப்புதான் மனித குலத்தைக் காப்பாற்றி வருகிறது. எல்லாமே முடங்கிக்கிடக்கிற நேரத்திலும் நம்முடைய உணவுக்காக, சுகாதாரத்திற்காக, உயிருக்காக, மீட்சிக்காக யாரோ ஒருவர் எங்கோ ஓரிடத்தில் உடலை வருத்தி, மூளையைப் பயன்படுத்தி உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்.
இவர்கள் அத்தனை பேரையும் போற்றிட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இந்த இக்கட்டான காலத்தில் வேலையிழப்பு, ஊதிய இழப்பு போன்றவற்றைச் சந்திக்கும் எல்லாத்துறைகளின் உழைப்பாளர்களுக்கும் நாம் துணை நிற்போம். அரசு, தனியார் என்ற பேதமெல்லாம் இல்லாமல் அனைத்துத் துறைகளிலும் உழைக்கும் வர்க்கத்தினரை உற்சாகத்தோடு மீண்டெழச் செய்ய இந்த மே தினத்தில் உறுதி ஏற்போம்.
ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே! உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே!' என்று பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நமக்குக் கற்றுத் தந்த பாதையில் நடந்து உழைப்பாளர்கள் அனைவரையும் கொண்டாடுவோம்; வாழ்த்துவோம். ' உழைப்பவரே உயர்ந்தவர்' என உரக்கச் சொல்வோம்!’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கு: மே 1ஆம் தேதி நடைபெறவிருந்த கிராமசபை கூட்டங்கள் ரத்து!