சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாள்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றும் நாளையும்: மேலும், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்றும் (மே.1) நாளையும் (மே.2) தெற்கு கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 03-05: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.