சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர், தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்து, கரோனா நோய்த்தொற்று பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், 'சென்னையில் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் கொண்ட குழுக்களில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் இணைத்திட வேண்டும். குறிப்பாக, வார்டு அளவில் அனைத்துக் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர் குழுக்களை அமைக்க வேண்டும்.
அதிகரித்து வரும் நோயாளிகளை மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிக்கப் போதுமான இடவசதிகள் இல்லாததாலும், சிறப்பு முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லாததாலும், அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் கரோனா சிகிச்சைக்காக அரசு பயன்படுத்த வேண்டும்.