சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் ரிப்பன் கட்டட வளாகத்தில் மேயர் பிரியா தலைமையில் இன்று (ஜூலை.30) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மொத்தம் 98 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சென்னை பள்ளிகளில் தற்காலிக கணினி உதவியாளர்கள், கணினி ஆசிரியர்கள், இளநிலை உதவியாளர்கள், பாதுகாவலர்கள், மழலையர் பிரிவில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆயாக்கள் நியமிப்பது தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நான்காவது வார்டு உறுப்பினர் ஜெயராமன் கூறுகையில், "மாநகராட்சி பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர், கணினி ஆசிரியர் உள்ளிட்டோரை தலைமை ஆசிரியர்கள் நேரடியாக நியமிக்கலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளோம். தலைமை ஆசிரியர், ஆசிரியர்களை நேரடியாக நியமிப்பதில் சில அரசியல் விளையாட்டு இருக்கக்கூடும்.
அரசு பள்ளியின் தரத்தை உயர்த்த இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்றால் தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.