சென்னை:பட்டியலின ஊராட்சிமன்ற தலைவர் அவமதிப்பு தொடர்பாக உயர் அலுவலர்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பட்டியலின ஊராட்சிமன்றத் தலைவர் அவமதிப்புதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாலர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உள்ளாட்சிமன்றப் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்ட பட்டியலினத்தைச் சார்ந்தவர்கள் அவமதிக்கப்படுவது, தேசியக் கொடியேற்ற அனுமதி மறுக்கப்படுவது, ஊராட்சிமன்றத் தலைவர் என்ற முறையில் கடமையை ஆற்றவிடாமல் தடுப்பது தொடர் சம்பவங்களாகி வருகின்றன.
இத்தகைய சம்பவங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. ஏற்கனவே, 15க்கும் மேற்பட்ட இதுபோன்ற சம்பவங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர, யாரும் கைது செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.
மேலும், இச்சம்பவங்கள் குறித்து விபரம் அறிந்த பின்னரும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, இத்தகைய சம்பவங்கள் உயர் அலுவலர்களின் ஒத்துழைப்புடனேயே தொடர்ந்து நடைபெறுவதாகக் கருத வேண்டியுள்ளது.
எனவே, இத்தகையச் சம்பவங்களை தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்குப்பதிவு செய்த அனைத்து இடங்களிலும் குற்றமிழைத்தவர்களைக் கைது செய்யவேண்டும். சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலர்களையும் வழக்கில் குற்றவாளிவளாகச் சேர்க்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வற்புறுத்துகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.