சென்னை:மலக்குழி மரணங்கள் குறித்தும், மாதவரம் மற்றும் பெருங்குடியில் நடந்த மலக்குழி மரணங்கள் குறித்தும் தேசிய அளவிலான மனித உரிமை அமைப்புகளில் கூட்டமைப்பு தலைவர் அ. மார்க்ஸ் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அ. மார்ஸ், "மலக்குழி மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது ஆனால், அதற்கான இழப்பீடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சரியாக சென்று சேருவதில்லை. சமீபத்தில் மாதவரம் பகுதியில் இரண்டு நபர்களும், பெருங்குடி பகுதியில் இரண்டு நபர்களும் கழிவு அடைப்பை நீக்குவதற்காக உள்ளே சென்று விஷவாயு தாக்கி இறந்துள்ளனர்.
மாதவரம் பகுதியில் இருந்த இரண்டு நபர்களுக்கு மட்டும் அரசு சார்பில் 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது, ஆனால் பெருங்குடியில் இறந்த இரண்டு நபர்களுக்கு எந்த ஒரு இழப்பீடும் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்ட பொழுதும் அவர்கள் சரிவர எங்களுக்கு பதில் அளிக்கவில்லை.
பெருங்குடியில் இறந்த நபர்கள் ஒப்பந்ததாரர்கள் மூலம் கொண்டு வந்து தனியார் நிறுவனத்தில் கழிவுநீரை அகற்றுவதற்காக உள்ளே இறங்கி இறந்துள்ளனர். அந்த தனியார் நிறுவனம் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. எனவே, அந்த நீதிமன்றத்தில் எப்பொழுது தீர்வு வரும் என்று தெரியவில்லை. இதுவரை அந்த குடும்பத்திற்கு எந்த ஒரு உதவியும் அரசு சார்பில் சென்று சேரவில்லை.