சென்னை:ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் சுமார் நூற்றுக்கணக்கான வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அதனைக் கடந்த ஒரு வார காலமாக அகற்றும் பணியில் காவல் துறையினர் உதவியோடு வருவாய் மற்றும் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வந்தது.
தொடர்ந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நேற்று (மே 8) அலுவலர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த கண்ணையன் (55) என்பவர், அவரின் வீட்டை இடிக்க எதிர்ப்புத் தெரிவித்து தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதையடுத்து, அங்கிருந்த காவல் துறையினர், பொதுமக்கள் ஆகியோர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.