சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை நேற்றிரவு (அக்.31) தொடர்பு கொண்ட நபர் ஒருவர், சற்று நேரத்தில் முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் எனக்கூறி செல்போன் தொடர்பைத் துண்டித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து உடனடியாக தேனாம்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் முதலமச்சரின் வீட்டுக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில் அத்தகவல் புரளி எனத் தெரியவந்தது.
இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வந்த செல்போன் எண்ணை காவல் துறையினர் தீவிரமாக ஆய்வு செய்தனர். இதில் வண்டலூர் மாம்பாக்கம் பகுதியில் இருந்து அழைப்பு வந்தது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து உடனடியாக அப்பகுதி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.