சென்னை:ஸ்மூல் (Smule) என்ற செயலி மூலமாக பிரபலமான மெட்டுகளுக்கு ரசிகர்கள் பாட வழி செய்வதோடு, அந்த ஒலிப்பதிவை பலவிதங்களில் பகிர்ந்து கொள்ளவும் வழி செய்கிறது. இந்த பகிர்வுகள் விதவிதமான உரையாடலாகவும் மலர்ந்து நட்பு வலையை பெரிதாக்குகிறது.
இசை சமூக ஊடகம் என சொல்லக்கூடிய ஸ்மூல் செயலி மூலமாக கல்லூரி பயிலும் மாணவிகள், திருமணமான பெண்களிடம் நட்பை உருவாக்கி, முகநூல், வாட்ஸ் அப் எண்களை பெற்று அவற்றின் மூலம் நட்பாக பழகி நகை, பணம் பறித்த நபரை சென்னை காவல் துறையினர் தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இயங்கி வரும் சைபர் கிரைம் பிரிவில் கல்லூரி மாணவி ஒருவர் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் “ஸ்மூல் செயலி மூலம் எனக்கு அறிமுகமான நபர் ஒருவர், எனது தனிப்பட்ட விவரங்களை தன்னிடம் வாங்கி பழகி, பின் தன்னைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி ரூ. 17 ஆயிரம் பணம், 13.5 சவரன் நகைகளை பறித்துள்ளார்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
பெண்களிடம் பணம் பறித்த நபர்
இந்த புகார் மனுவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர், தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்ட நபர் திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உள்பட 15க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஸ்மூல் செயலி மூலமாக டூயட் பாடி பழக்கத்தை ஏற்படுத்தி, அவர்களது முகநூல் கணக்கு, வாட்ஸ்அப் எண் ஆகியவற்றை வாங்கி அதன் மூலமாக நட்பை வளர்த்துள்ளார்.
பின்னர், அவர்களை காதலிப்பதாக கூறி நெருக்கத்தை வலப்படுத்தியுள்ளார். இதையடுத்து, தனக்கு அவசர உதவி தேவைப்படுகிறது என்றும் தனது பாட்டி இறந்து விட்டதாக கூறியும், அடுத்தவர்களுக்கு உதவி செய்யவுள்ளதாகவும் பல காரணங்களை கூறி பெண்களிடம் பணம் பறித்து வந்துள்ளார். இவர் பணம் கேட்டு கொடுக்கவில்லை என்றால் அவர்களது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, பெற்றோரிடம் காண்பித்து விடுவேன் என மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.