செங்கல்பட்டு:மாமல்லபுரம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவுகள் பக்கிங்காம் கால்வாயில் கொட்டப்பட்டு வருவதாக, தனேஜா வீட்டுமனை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 2018ஆம் ஆண்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "பக்கிங்காம் கால்வாயில் குப்பைகள் கொட்டப்படும் விவகாரத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாமல்லபுரம் பேரூராட்சிக்கு நோட்டீஸ் மட்டுமே அனுப்பியது. அதன் பின்பு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை முன்னதாக விசாரித்த உயர் நீதிமன்றம், குப்பைக் கிடங்கின் தற்போதைய நிலை குறித்து நேரில் ஆய்வு செய்ய பெண் வழக்கறிஞர் என்.டி. நானே என்பவரை நியமித்தது. இந்த வழக்கு, இன்று (ஏப். 19) தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில், குப்பை கிடங்கு செயல்படவில்லை. அதற்கான புகைப்பட ஆதாரங்களும் அறிக்கையில் சமர்பிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.