உலகப் புகழ்பெற்ற சுற்றுலா இடமான மாமல்லபுரத்தை அழகு படுத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அமர்வு, மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு தேவைப்படும் நிதி குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு சுற்றுலாத் துறைச் செயலாளர், நிதித்துறைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைச் செயலாளர் மற்றும் தொல்லியல் துறை இயக்குநர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது. இக்குழு கூடி விவாதித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடபட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய சுற்றுலாத்துறை சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாமல்லபுரத்தில் உள்ள விடுதிகளை முறைப்படுத்துவது தொடர்பாகவும், வழிகாட்டிகளுக்கு விதிமுறைகள் வகுக்க இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு தேவையான நிதி குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகளின் கூட்டம் நேற்று நடைபெற்றதாகவும், அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய அவகாசம் வழங்கவும் கோரிக்கை விடுத்தார்.
மாமல்லபுரம் வழக்கு - அரசுக்கு இரண்டு வார காலம் அவகாசம்! தொல்லியல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், நிதி ஒதுக்குவது தொடர்பாக மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டுமே தவிர, தொல்லியல்துறை அல்ல எனக் குறிப்பிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு தேவைப்படும் நிதி குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டக் குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: நாட்டில் தலைவிரித்தாடும் ஊழல்: உயர் நீதிமன்றம் வேதனை