சென்னையில், 300 கோடி ரூபாய் செலவில் மூன்றாயிரத்து 800 சாலைகள் அமைப்பதற்காக 48 டெண்டர்களும், 290 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால்கள் கட்டுவதற்காக 73 டெண்டர்களும் 2018ஆம் ஆண்டு கோரப்பட்டன. இந்த டெண்டரில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யக்கோரி அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், மாநகராட்சி அலுவலர்கள் ஒப்பந்ததாரர்களுடன் கூட்டு சேர்ந்து, சில ஒப்பந்ததாரர் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு டெண்டர்கள் வழங்கப்பட்டதாகவும், டெண்டர் விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் கூறி, 2018 நவம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளிக்கப்பட்டு, அப்புகாரின் அடிப்படையில் ஆரம்பகட்ட விசாரணையை மேற்கொள்ள அனுமதி கோரி தலைமைச் செயலருக்கு லஞ்ச ஒழிப்புத் துறை கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் டெண்டர் வழங்கப்பட்டுள்ளது குறித்தும், தங்கள் விண்ணப்பங்கள் ஏற்கப்படாதது குறித்தும் 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள், மாநகராட்சி ஆணையருக்கும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலருக்கும் புகார் அளித்துள்ளதையும் மனுவில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.