தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஊழல் வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டு சிறை - முன்னாள் அமைச்சர் இந்திராகுமாரி

கடந்த அதிமுக ஆட்சியின்போது நடைபெற்ற, ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் எனச் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டு சிறை
அதிமுக முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டு சிறை

By

Published : Sep 29, 2021, 12:30 PM IST

Updated : Sep 29, 2021, 2:49 PM IST

சென்னை:அதிமுக ஆட்சியின்போது (1991 -1996) இலவச வேட்டி, சேலை, பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசக் காலணி வழங்கியதில் முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்குகளில் அப்போதைய அமைச்சர் இந்திரகுமாரி உள்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்திரகுமாரி மீது மேலும் ஒரு வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. 1997ஆம் ஆண்டு சமூகநலத் துறையின் செயலராக லட்சுமி பிரானேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்திய இந்திரகுமாரி

அதிமுக ஆட்சிக் காலத்தில் சமூகநலத் துறை அமைச்சராக இருந்த இந்திரகுமாரி, சமூகநலத் துறையின் முன்னாள் செயலர் கிருபாகரன் ஐஏஎஸ், மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் சண்முகம் ஐஏஎஸ், இந்திரகுமாரியின் கணவரும், வழக்கறிஞருமான பாபு, இந்திரகுமாரியின் உதவியாளர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் மீது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி காவல் துறையினர் தாக்கல்செய்தனர். அதில், "ஊழல் செய்யும் நோக்கத்தில் 1992-96ஆம் ஆண்டுகளில் பாபுவை நிர்வாக அறங்காவலராக ஏற்படுத்தி மெர்சி மதர் இந்தியா என்ற அறக்கட்டளையும், பரணி சுவாதி என்ற பெயரில் கல்வி அறக்கட்டளையும் தொடங்கி அரசிடம் பணம் பெற்றனர்.

காது கேளாதோர் பள்ளியும், மாற்றுத்திறனாளி பள்ளிகளையும் தொடங்குவதாகக் கூறி அரசுப் பணத்தில் 15.45 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். இந்திரகுமாரி, கிருபாகரன், சண்முகம் ஆகியோர் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தி சுயலாபம் அடைந்துள்ளனர்.

இந்திரகுமாரிக்கு 5 ஆண்டு சிறை

இவர்கள் செய்த ஊழலுக்கு பாபு, வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் உடந்தையாக இருந்ததால் இவர்கள் அனைவரையும் இந்திய தண்டனைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம் ஆகிய சட்டங்களின்கீழ் தண்டிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.


பின்னர் இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்பி - எம்எல்ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில்,

  • ஏ1 குற்றவாளி இந்திரகுமாரிக்கு ஐந்தாண்டு சிறை
  • ஏ2 குற்றவாளி கிருபாகரன் மறைந்ததால் விடுவிப்பு
  • ஏ3 குற்றவாளி சண்முகத்திற்கு மூன்றாண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிப்பு
  • ஏ4 குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட வெங்கடகிருஷ்ணன் விடுதலை

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பை நீதிபதி அலிசியா அளித்துள்ளார். நீதிபதி தீர்ப்பு வழங்கிய நிலையில், இந்திரகுமாரிக்கு நெஞ்சடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: நாரதா ஊழல் வழக்கு: திருணமூல் காங்., 2 அமைச்சர்கள் உள்பட நால்வர் கைது!

Last Updated : Sep 29, 2021, 2:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details