கடந்த 1998ல் தாம்பரம் நகராட்சி ஆணையராக பணியாற்றிய பழனி, எவ்வித டெண்டரும் கோராமால் 83,920 ரூபாய் மதிப்பிலான பல்வேறு பணிகளை மேற்கொண்டதாக அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது. அதனை விசாரித்த அதிகாரி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்ல என்று அறிக்கை அளித்த நிலையில், அதனை ஏற்காத நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர், துறை ரீதியான விசாரணையை நிலுவையில் வைத்து, 2001ஆம் ஆண்டு அவர் பணி ஓய்வு பெற அனுமதித்தார்.
பின்னர் 2005 ஆம் ஆண்டு, 83,920 ரூபாய் மதிப்பிலான பணிகளை மேற்கொண்டதற்காக பழனியின் ஓய்வூதியத்தில் ஒவ்வொரு மாதமும் 200 ரூபாய் வீதம் பிடித்தம் செய்யும் வகையில் தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து பழனி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு பதிலளித்த தமிழக அரசு, அனைத்து விதிகளையும் பின்பற்றியே தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், குற்றச்சாட்டு குறிப்பாணையில் இடிபாடுகளை அகற்ற லாரி அமர்த்தியது, தெரு விளக்குகளுக்கு பியூஸ் கேரியர் வாங்கியது, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு மின் மோட்டார் வாங்கியது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டதற்காக மனுதாரருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, அசம்பாவித நிகழ்வுகளை தடுக்கும் வகையில் ஒரு லட்சத்திற்கும் குறைவான தொகையையே பயன்படுத்தி இருக்கிறார் என்பதால் பழனிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.